பக்கவாதத்துக்குப் பின்னர் மறுசீரமைப்பு: பிசியோதெரபி
Post-stroke care management on physiotherapy
உடல் இயக்கம் மற்றும் ஒருங்கிணைப்பைக் கட்டுப்படுத்துகின்ற மூளையின் பாகங்களைப் பக்கவாதம் சேதமடையச் செய்யலாம். கூடுமான வரை அதிக பலம், ஒருங்கிணைப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மையை நீங்கள் மீண்டும் பெற உடற்பயிற்சி சிகிச்சை உதவுகிறது. நீங்கள் சிறப்பாக நலமடைவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் உங்களுக்கு வழங்குவதன் பொருட்டு, உங்கள் உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர்கள் உங்கள் மருத்துவ வரலாறு மற்றும் தற்போதைய பிரச்சனைகளின் அடிப்படையில் உங்களை மதிப்பீடு செய்து அதற்கு ஏற்றவாறு ஒரு பராமரிப்புத் திட்டத்தைப் பரிந்துரைப்பார்கள்.
எனது உடல் இயக்கத்தைப் பக்கவாதம் எவ்வாறு பாதிக்கிறது?
உங்கள் உடலின் ஒரு பக்கத்தில் பலவீனத்தை அல்லது முழுமையான முடக்குவாதத்தை நீங்கள் அனுபவிக்கக்கூடும். இதனால் அன்றாட நடவடிக்கைகளுக்கு கைகால்களைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு சிரமம் ஏற்படலாம்.
பாதிக்கப்பட்ட பக்கத்தில் உள்ள கைகால்களில் உணர்ச்சி சார்ந்த தொந்தரவுகளை நீங்கள் அனுபவிக்கக்கூடும். பாதிக்கப்பட்ட கைகால்களில் நீங்கள் உணர்ச்சியின்மையை உணரலாம், அல்லது பலவீனம் காரணமாக கனமாக உணரலாம். இது உடல் இயக்கங்களை ஒருங்கிணைப்பதற்கான உங்கள் திறனைப் பாதிக்கலாம். எப்பொழுதாவது, சிலர் “எரிச்சலை” அல்லது “ஊசி குத்துவதைப் போன்ற உணர்வை” அனுபவிக்கலாம். அது அசௌகரியமானதாக அல்லது வலி நிறைந்ததாக இருக்கலாம்.
உங்கள் உடற்சமநிலையிலும், நிமிர்ந்த நிலையில் உடலைப் பேணுவதிலும் உங்களுக்குப் பிரச்சனை இருக்கலாம்.
பலவீனமான பக்கத்தில் உள்ள மூட்டுகள் எளிதில் பாதிக்கப்படலாம். உதாரணமாக, பலவீனமான பக்கத்தில் உள்ள தோள்பட்டை, முழங்கால் அல்லது கணுக்கால் மூட்டுகளில் உள்ள மூட்டிணைப்புத் தசைநார்களில் இறுக்கம் அல்லது தசைநார்கள் நெடுகிலும் அழற்சி ஏற்படலாம்.
உங்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள தசைகளும் கூட இறுக்கமடையலாம். அதனால் உங்கள் உடல் இயக்கம் கட்டுப்படுத்தப்படலாம். சிலருக்குத் தசைப் பிடிப்புகள் அல்லது தசை விறைப்படைதல் ஏற்படலாம்.
உடற்பயிற்சி சிகிச்சை என்பது என்ன?
பக்கவாதம் ஏற்பட்ட பிறகு, பாதிக்கப்பட்ட உயிரணுக்களுக்கு பதிலாக, புதிய உயிரணுக்களை மூளையால் உருவாக்க முடியாது. உடற்பயிற்சிகள், திறன் பயிற்சி, திறம்படக் கையாளுதல், நரம்புத்தசை சார்ந்த மின் வழி உணர்வுத் தூண்டல் போன்ற பல்வேறு வழிமுறைகளின் வாயிலாக, உங்கள் மூளை தன்னைத் தானே மீண்டும் ஒழுங்கமைத்துக் கொள்வதற்கான ஆற்றலை அதிகரித்து, இழந்த செயல்பாடுகளில் சிலவற்றை மீண்டும் பெற, உடற்பயிற்சி சிகிச்சை உதவுகின்றது. தேவையான இடத்தில், எந்திரனியல் (ரோபாட்டிக்ஸ்) சார்ந்த சிகிச்சை அணுகுமுறையும் கூட பயன்படுத்தப்படலாம்.
உடற்பயிற்சி சிகிச்சை எவ்வாறு உதவலாம்?
பக்கவாதம் ஏற்பட்ட பிறகு உள்ள தொடக்கக் கட்டத்தில், உங்கள் உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர் கீழ்க்கண்டவற்றின் மீது கவனம் செலுத்துவார்:
பாதுகாப்பாக நடமாடுவதற்கான உங்கள் ஆற்றலை மீட்டெடுத்தல்.
உங்கள் தேவைகளைப் பொறுத்து, உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர் உங்களுக்கு:
உங்கள் கைகால்களின் இயக்கங்களைப் பலப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் உதவுகின்ற சிகிச்சையை அளிப்பார்.
நீங்கள் படுக்கும் போது அல்லது அமரும் போது எந்த நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்துவார்.
உங்களைப் படுக்கையில் இருந்து நாற்காலிக்கும், நாற்காலியில் இருந்து படுக்கைக்கும் எவ்வாறு இடம் மாற்றுவது என்பது குறித்த வழிமுறைகளை உங்கள் பராமரிப்பாளர்களுக்கு அல்லது தாதிகளுக்கு அவர் கற்றுத் தருவார்.
நீங்கள் மீண்டும் நடக்கக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்கு உதவுவார். மேலும், உங்களின் மறுவாழ்வுப் பயணத்தில் நீங்கள் துடிப்புடன் பங்கேற்பதற்கு உங்களை ஊக்குவிப்பார்.
ஊன்றுகோல்கள் போன்ற உதவிச் சாதனங்கள் உங்கள் நடையை மேம்படுத்துமா என்பதை முடிவுசெய்வார்.
குறிப்பாக, சமூக நடமாட்டத்திற்கு உங்களுக்குத் தேவைப்படும் தாங்குதிறன் மற்றும் அதிக சமநிலைத் திறன்களை மேம்படுத்துவார்.
நீங்கள் மீண்டெழ உதவுவதற்குப் பக்கவாதப் பராமரிப்புக் குழு, உங்கள் பராமரிப்பாளர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து செயல்படுவார்.
2. பின்வருவன போன்ற இரண்டாம்நிலைச் சிக்கல்களைத் தடுத்தல்
தசை மற்றும் மூட்டு இறுக்கம்
மார்புத் தொற்றுகள்
கடுமையான பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சிலருக்கு முழுமையாக மீண்டு வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகும். அத்தகைய சந்தர்ப்பங்களில், உதவிச் சாதனங்களைப் பயன்படுத்தி கூடுமானவரை சுயசார்புடன் நீங்கள் உங்கள் அன்றாடச் செயல்களைச் செய்வதற்கான பல்வேறு வழிமுறைகளை, உங்கள் உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர் உங்களுக்கும் உங்கள் பராமரிப்பாளருக்கும் கற்றுத்தருவார்.
எனக்கு எங்கு சிகிச்சை அளிக்கப்படும்?
உங்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் இடம் எது என்பது, பக்கவாதத்தின் தீவிரத்தன்மையைப் பொறுத்து இருக்கும். உங்கள் நிலைமைக்கு எந்த இடம் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதைக் கண்டறிவதற்கு, உங்களின் பக்கவாதப் பராமரிப்புக் குழுவிடம் பேசுவது முக்கியமாகும்.
உள்நோயாளி
நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் கூடிய விரைவில் உடற்பயிற்சிச் சிகிச்சை தொடங்குகிறது. அதில் படுக்கைக்கு அருகில் உடற்பயிற்சி செய்தல், படுக்கைப்பிரிவைச் சுற்றி அல்லது ஒரு சிறப்பு உடலுறுதிக் கூடத்தில் நடமாடுதல் போன்றவை அடங்கும்.
நீங்கள் மருத்துவ ரீதியான ஸ்திரத்தன்மையை அடைந்தவுடன், உங்கள் சிகிச்சையைத் தொடர்வதற்கு நீங்கள் ஒரு மறுவாழ்வுப் பிரிவுக்கு (மருத்துவமனையில் அல்லது சமூக மருத்துவமனையில்) இடமாற்றம் செய்யப்படலாம்.
வெளிநோயாளி
மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டதற்குப் பிறகான இலக்குகளை அடைவதற்கு பல்வேறு திட்டங்களை வழங்குகின்ற பகல்நேர மறுவாழ்வு நிலையங்கள் அல்லது மருத்துவமனைகளில் உள்ள வெளிநோயாளிச் சிகிச்சைமுறை சேவைகள் உள்ளன.
இல்லத்தை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சைமுறை
இல்லத்தை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சைமுறையை வழங்குகின்ற சிறப்புச் சமூக மறுவாழ்வுக் குழுக்கள் உள்ளன. இவை தங்கள் வீட்டிற்கு வெளியே நடமாடுவதில் பிரச்சனையைக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு அல்லது தங்கள் வீடு போன்ற ஒரு தனிப்பட்ட சூழலில் பயிற்சிகளை மேற்கொள்வதை இலக்காகக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு ஏற்றதாக இருக்கலாம்.
எனது பராமரிப்பாளர் அல்லது குடும்பம் எனக்கு எவ்வாறு உதவலாம்?
சாத்தியமென்றால், உங்களின் பராமரிப்பாளர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் உங்களுடன் மறுவாழ்வு அமர்வுகளில் கலந்துகொள்ள வேண்டும். அவர்கள் உடற்பயிற்சிகளில் உங்களுக்கு உதவக் கற்றுக்கொண்டு, வீட்டில் உங்களுக்கு மறுவாழ்வு வழிமுறைகளை மேற்கொள்ளலாம்.
நீங்கள் படுக்கையில் வீழ்ந்துவிட்டால்,
உங்கள் மூட்டுகளின் நீட்டி மடக்கும் தன்மையைப் பேணுவதற்கும், உங்களின் உடற் தோரணை மற்றும் சமநிலையை மேம்படுத்துவதற்கும் உங்களை எவ்வாறு வெவ்வேறு நிலைப்பாடுகளில் வைத்திருப்பது என்பது குறித்தும் உங்கள் உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர் உங்கள் பராமரிப்பாளர்களுக்குக் கற்றுத் தருவார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது படுக்கைப் புண்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு 2 முதல் 3 மணிநேரங்களுக்கு ஒருமுறை உங்களின் உடல் இருக்கை நிலையை மாற்ற உதவுவதற்கு உங்கள் பராமரிப்பாளருக்கு தாதிகள் கற்றுத் தருவார்கள்.
மீண்டெழுவதற்கான உதவிக்குறிப்புகள்
பக்கவாதம் ஏற்பட்ட பிறகு கூடுமான விரைவில் செயலூக்கத்துடன் இயங்கவேண்டியது அவசியமாகும்.
தினமும் அல்லது உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர் பரிந்துரைத்தவாறு தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்.
உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர் பரிந்துரைத்த உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
விரைவில் மீண்டெழுவதற்குத் தினமும் அல்லது வாரத்தில் குறைந்தது 3 முறை உடற்பயிற்சி செய்வதற்கு நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் பாதிக்கப்பட்ட பக்கத்தைக் கூடுமான வரை அதிக அளவில் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.
பொறுமையைக் கடைப்பிடியுங்கள், உடனடி விளைவுகளுக்குப் பதிலாக நீண்டகால விளைவுகளை இலக்காகக் கொள்ளுங்கள்.
நீங்கள் மீண்டெழ உதவும் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
பக்கவாதத்திற்குப் பிறகு ஏற்படும் களைப்பினால் நீங்கள் அவதிப்பட்டால், அதற்கு உடற்பயிற்சி உதவலாம், ஆனால் அத்தகைய உடற்பயிற்சியை உடல் தாங்கக்கூடியவாறு படிப்படியாக மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
உங்கள் மேம்பாட்டைப் பதிவுசெய்வதற்கு ஒரு குறிப்பேட்டைப் பயன்படுத்தவும்.
நீங்கள் சிங்கப்பூர் தேசியப் பக்கவாதச் சங்கம் (SNSA) அல்லது பக்கவாத ஆதரவு நிலையத்தில் (S3) உள்ள சிகிச்சைக் குழுக்களில் சேரலாம்.
நான் எவ்வாறு பாதுகாப்பாக நடமாடலாம் மற்றும் கீழே விழும் ஆபத்தை எவ்வாறு குறைக்கலாம் ?
நீங்கள் நடப்பதற்கு உதவ ஒரு நடை உதவிச் சாதனத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தால், இந்தப் பாதுகாப்பு ஆலோசனையை நீங்கள் குறித்துக் கொள்வது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
நீங்கள் இரண்டு கால்களின் பலத்தை அதிகரிப்பதை அல்லது பேணிப் பராமரிப்பதை இலக்காகக் கொள்ள வேண்டும்.
அமர்ந்து எழுந்துகொள்ளும் உடற்பயிற்சியைத் திரும்பத் திரும்பச் செய்வது, பலத்தைப் பேணிப் பராமரிப்பதற்கான ஓர் எளிய மற்றும் ஆற்றல்வாய்ந்த வழியாகும்.
உங்களின் குறிப்பிட்டத் தேவைகளுக்காக, உங்கள் கால்களை வலுப்படுத்துவதற்கான பிற முறைகளை உங்கள் உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர் வடிவமைக்கலாம்.
நீங்கள் நிற்கும் போது உங்கள் உடல் சமநிலையில் உள்ளதா என்று சரி பார்க்க வேண்டும்.
உங்கள் உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர் உங்களுக்குக் கற்றுத் தந்த பொருத்தமான உடல் சமநிலைப்படுத்தல் உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வது, உங்கள் உடல் சமநிலையைச் சிறப்பாக வைத்துக்கொள்ள உதவும்.
நித்திரையில் இருந்து எழுந்தவுடன், சிறிது நிமிடம் படுக்கையில் அமர்ந்து இருக்கவும். நடப்பதற்கு முன் சில முறை நின்று அமரவும்.
நீங்கள் நலமாக உணரவில்லை என்றாலோ அல்லது விழித்து எழுந்தவுடன் நடக்க வேண்டிய தேவை ஏற்பட்டாலோ உங்களுடன் வேறு ஒருவர் நடந்து வருவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
நுழைவாயில்களில், படிக்கட்டுகளில் மற்றும் குளியலறைகளுக்குள் கைப்பிடிச் சட்டங்களை நிறுவுவது பாதுகாப்பை அதிகரிக்கும்.
வெளிப்புறங்களில் நடக்கும் போது, உங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள நிலைமை ஆபத்தானதாக இருந்தால் அல்லது நீங்கள் வழக்கமாக எதிர்கொள்கின்றவற்றில் இருந்து வேறுபட்டிருந்தால். (உதாரணம்: ஈரமான தரை, மங்கலான வெளிச்சங்கள், அதிகரித்த பாதசாரிகள், கூட்டம் நிறைந்த பகுதியில் நடப்பது)
மெதுவாகவும், அளவு குறைவாகவும் அடியெடுத்து வைத்து நடக்கவும்.
சாத்தியமிருந்தால், நீங்கள் நடக்கும் போது யாரேனும் ஒருவரை உங்களுக்குப் பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர் பரிந்துரைத்த பொருத்தமான நடை உதவிச் சாதனங்களைப் பயன்படுத்துங்கள்.